Responsive image

பெரிய திருமொழி.444

பாசுர எண்: 1391

பாசுரம்
தாய்வாயில் சொற்கேளாள் தன்னாயத்
தோடணையாள் தடமென் கொங்கை-
யே,ஆரச் சாந்தணியாள், எம்பெருமான்
திருவரங்க மெங்கே? என்னும்,
பேய்மாய முலையுண்டிவ் வுலகுண்ட
பெருவயிற்றன் பேசில் நங்காய்,
மாமாய னென்மகளைச் செய்தனகள்
மங்கைமீர் . மதிக்கி லேனே . (5.5.4)

பெரிய திருமொழி.445

பாசுர எண்: 1392

பாசுரம்
பூண்முலைமேல் சாந்தணியாள் பொருகயல்கண்
மையெழுதாள் பூவை பேணாள்,
ஏணறியா ளெத்தனையும் எம்பெருமான்
திருவரங்க மெங்கே என்னும்,
நாண்மலராள் நாயகனாய் நாமறிய
வாய்ப்பாடி வளர்ந்த நம்பி,
ஆண்மகனா யென்மகளைச் செய்தனகள்
அம்மனைமீரறிகி லேனே . (5.5.5)

பெரிய திருமொழி.446

பாசுர எண்: 1393

பாசுரம்
தாதாடு வனமாலை தாரானோ
வென்றென்றே தளர்ந்தாள் காண்மின்,
யாதானு மொன்றுரைக்கில் எம்பெருமான்
திருவரங்கம் என்னும், பூமேல்
மாதாளன் குடமாடி மதுசூதன்
மன்னர்க்காய் முன்னம் சென்ற
தூதாளன், என்மகளைச் செய்தனகள்
எங்ஙனம்நான் சொல்லு கேனே . (5.5.6)

பெரிய திருமொழி.447

பாசுர எண்: 1394

பாசுரம்
வாராளு மிளங்கொங்கை வண்ணம்வே
றாயினவா றெண்ணாள், எண்ணில்
பேராளன் பேரல்லால் பேசாள் இப்
பெண்பெற்றே னென்செய் கேன்நான்,
தாராளன் தண்குடந்தை நகராளன்
ஐவர்க்கா யமரி லுய்த்த
தேராளன், என்மகளைச் செய்தனகள்
எங்ஙனம்நான் செப்பு கேனே . (5.5.7)

பெரிய திருமொழி.448

பாசுர எண்: 1395

பாசுரம்
உறவாது மிலளென்றென் றொழியாது
பலரேசும் அலரா யிற்றால்,
மறவாதே யெப்பொழுதும் மாயவனே.
மாதவனே. என்கின் றளால்,
பிறவாத பேராளன் பெண்ணாளன்
மண்ணாளன் விண்ணோர் தங்கள்
அறவாளன், என்மகளைச் செய்தனகள்
அம்மனைமீரறிகி லேனே . (5.5.8)

பெரிய திருமொழி.449

பாசுர எண்: 1396

பாசுரம்
பந்தோடு கழல்மருவாள் பைங்கிளியும்
பாலூட்டாள் பாவை பேணாள்,
வந்தானோ திருவரங்கன் வாரானோ
என்றென்றே வளையும் சோரும்,
சந்தோகன் பௌழியன் ஐந் தழலோம்பு
தைத்திரியன் சாம வேதி,
அந்தோ.வந் தென்மகளைச் செய்தனகள்
அம்மனைமீரறிகி லேனே . (5.5.9)

பெரிய திருமொழி.450

பாசுர எண்: 1397

பாசுரம்
சேலுகளும் வயல்புடைசூழ் திருவரங்கத்
தம்மானைச் சிந்தை செய்த,
நீலமலர்க் கண்மடவாள் நிறையழிவைத்
தாய்மொழிந்த வதனை, நேரார்
காலவேல் பரகாலன் கலிகன்றி
ஒலிமாலை கற்று வல்லார்,
மாலைசேர் வெண்குடைக்கீழ் மன்னவராய்ப்
பொன்னுலகில் வாழ்வர் தாமே (5.5.10)

பெரிய திருமொழி.451

பாசுர எண்: 1398

பாசுரம்
கைம்மான மழகளிற்றைக்
கடல்fகிடந்த கருமணியை,
மைம்மான மரகதத்தை
மறையுரைத்த திருமாலை,
எம்மானை எனக்கென்று
மினியானைப் பனிகாத்த
வம்மானை, யான்கண்ட
தணிநீர்த் தென் னரங்கத்தே (5.6.1)

பெரிய திருமொழி.452

பாசுர எண்: 1399

பாசுரம்
பேரானைக் குறுங்குடியெம்
பெருமானை, திருதண்கால்
ஊரானைக் கரம்பனூர்
உத்தமனை, முத்திலங்கு
காரார்த்திண் கடலேழும்
மலையேழிவ் வுலகேழுண்டும்,
அராதென் றிருந்தானைக்
கண்டதுதென் னரங்கத்தே (5.6.2)

பெரிய திருமொழி.453

பாசுர எண்: 1400

பாசுரம்
ஏனாகி யுலகிடந்தன்
றிருநிலனும் பெருவிசும்பும்,
தானாய பெருமானைத்
தன்னடியார் மனத்தென்றும்
தேனாகி யமுதாகித்
திகழ்ந்தானை, மகிழ்ந்தொருகால்
ஆனாயன் ஆனானைக்
கண்டதுதென் னரங்கத்தே (5.6.3)

Enter a number between 1 and 4000.